பனிபாலை
நீங்கள் பார்க்காத
ஆறாம் திணை !
நீர் கூட
கல்லாகும்
உறைபாகை!
சூரியனும்
உறைந்து போகும்
நெடும் பனிக்காலம் !
குளிர்கால கம்பளி
போர்த்திய
மனிதர் மத்தியில்
இலையுதிர்ந்த
ஆற்றோர
"ஓக்" மரங்கள் !
ஓயாத
அலைகள் கூட
சிலகாலம்
ஓய்வெடுக்கும் !
பருந்துக்கு
விருந்தான
ஆண் தோழன் !
முட்டையில்
இறந்து போன
என் குஞ்சுகள் !
கரையான் தின்ற
புத்தகத்தில்
எஞ்சிய
பக்கங்கள்
என் வாழ்க்கை !
வசந்த காலத்துக்கு
நான்
வான் நோக்கி
பறந்த போது
ஓய்வில்லாமல்
ஓய்வெடுக்கும்
கடல் மீன்கள் !
என்
கடைசி பதிவுகள் !
ஆழ்கடல்
உயரத்தில்
முகிலுரசி
பறக்கும் போது
சோர்ந்துபோன
என் இறகுகள்
சொல்லிக்கொண்ட
வார்த்தை
" முயற்சி செய் " !
தூரத்தில் வரும்போது
தொட்டு முத்தமிட
நினைத்தேன் !
நெருங்கி வந்தபோது
பயந்து விலகினேன் !
அலுமினிய பறவை !
கடவுசிட்டு
குடியுரிமை அட்டை
எல்லை கோடு
கட்டுப்பாடு
அரைகுறை வாழ்க்கை
வசதி பொருக்க
வேலை
இதற்காக அல்ல !
எலும்புக்குருத்தை
ஊடறுத்துதாக்கும்
பனிப்புயல் !
புதுமண் தொட்டதும்
விசாரணை நடத்தி
முகாமில் அடைக்க
நான் அகதியல்ல !
எனக்கு
வானமே எல்லை !
இப்படிக்கு
கனகராஜ்


No comments:
Post a Comment